அம்மா கை விரல் பிடித்த கனம் கணம் அழுகை மறந்த காலம்.
அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம்.
கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம்.
அவள் கட்டிய முந்தானை கந்தலாயினும் கூட, அதில் கண்ட வாசனை சுகத்தை இன்னும் பெற இயலவில்லை பிறர் எவரிடமும்.
வெட்டிய மூங்கிலில் பற்றிய தீ போல அவள் விழிகள்.
சொட்டிய கண்ணீரையும் இம்மண்ணிற்க்குத் தராமல்,
என் முந்தானைக்கே சொந்தம் என்று தந்து விட்டுப் போகிறாள், ஒரு கையில் வைராக்கியத்தையும், மறு கையில் வைராக்கியத்துக்கே பிறந்த தன் மகனையும் அழைத்துக் கொண்டு.
வீதி வழி நடந்த பாதை,
பாதை வழி மறந்த பேதை,
என்னென்று அறியாது ஏதென்று புரியாது,
தன் கன்றான என்னைப் பற்றிக் கொண்டு போகும் போது
கண்ணீர் விடவும் தெரியாது நின்றேன்.
அம்மா அழுகையின் காரணம் அறியாது தவித்தேன்.
ஒரு நாள் அவள் வேலையில் தடை செய்து நான் விளையாடிய போது,
தடி கொண்டு என்னை அடித்து விட்டு தானும் அழுதாள்.
நானும் அழுதேன்.
அவள் அடித்த வலியை எண்ணி அல்ல.
அடம் பிடித்த என்னால் தானே அம்மா அழுகிறாள் என்று.
வட்ட வடிவ புட்டு வேண்டும் என்று நான் அழுத போது-அப்படியே
விட்டு விட மனமின்றி, ஏதுமில்லாத போதிலும் துருவிய தேங்காயில் நீ சுட்ட புட்டின் சுவை தாண்டி இன்னும் செல்லவில்லை என் நாக்கின் சுவை அரும்புகள்.
என்னைக் கொட்டிய தேளை
வெட்டி எறிந்த நீயா-இன்று
எட்ட இயலா தூரம் வரை
செல்லத் துணிந்தாய்?
நான் அறிவேன் அம்மா உன் எண்ணத்தை..
“பூமியில் மனிதர்களாய் வாழும் ஆகாயக் கழுகுகளுக்கு நாம் இரையாவதை விட,
இறுதியில் சேரும் இடத்திற்கு இப்பொழுதே செல்வோம் என்று.”
Reblogged this on தமிழின் அழகு! and commented:
“பூமியில் மனிதர்களாய் வாழும் ஆகாயக் கழுகுகளுக்கு நாம் இரையாவதை விட,
இறுதியில் சேரும் இடத்திற்கு இப்பொழுதே செல்வோம் என்று.”
LikeLike