மகிழினியின் மனது-2


அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மகிழினி யின் மீது படாரென்று மோதியது..

“அம்மா ஆ ஆ ஆ…..” என்று அலறிய மகிழினி
தூக்கி எறியப்பட்டாள்..

அந்த ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளை சுற்றி ஒரு முப்பது நாற்பது பேர் இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவர்கூட அவளை தூக்க வரவில்லை. அவளால் நகர முடியவில்லை. அவள் கால்கள் இரண்டும் பலத்த காயமுற்று இருந்தது.. அவளின் புத்தகப்பை வெகு தூரத்தில் பறந்து போய் விழுந்தது.. உடனிருந்த மகிழினி இன் தோழி பேரதிர்ச்சியுற்றாள்.. விஜிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அவளின் கைகளும் கால்களும் நடுநடுங்கி போனது.

மகிழினி க்கு விபத்து நடந்த அடுத்த நிமிடம் அந்த தனியார் வண்டி படாரென பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது.. அந்த பேருந்தின் நடத்துனர் மிகவும் நல்லவர். ஓடி வந்து தனது மகளை தூக்குவதுபோல் மகிழினியை ரத்தம் சொட்ட சொட்ட தனது இரு கைகளாலும் தூக்கினார். மகிழினி வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டே இருந்தாள்.. அப்போது வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவரிடம் கெஞ்சி மன்றாடி நின்றார் நடத்துனர்..

“சார் சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கள்.. அந்த பொண்ணு மேல பஸ் மோதிடுச்சு.. ரொம்ப அடிபட்டு இருக்கு.. ரத்தமும் நிறைய போயிட்டு இருக்கு. உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகணும். இல்லனா என்ன ஆகும்னு தெரியாது. பாவம் சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..”

அந்த இரு சக்கர வாகன ஓட்டி நல்ல மனசுக்காரர்..

“அப்படியா உடனே உட்காருங்க. சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போலாம். அய்யோ இப்படி போய்க்கிட்டே இருக்கே.. சீக்கிரம் ஏறுங்க..” என்று பதைபதைத்தார்..

மகிழினி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.. அவளை அழைத்துச் சென்றது ஒரு சிறிய அரசு கிளை மருத்துவமனை.. அங்கு அவ்வளவாக எந்த ஒரு வசதியும் கிடையாது.. அவர்கள் மகிழினிக்கு அவசர முதலுதவி சிகிச்சை மட்டும் செய்தார்கள்.

அவளுக்கு முதலுதவி செய்யும் நேரத்தில் அவளிடம் மருத்துவர் தொடர்ந்து கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். இல்லை என்றால் சுய நினைவை இழந்து விடுவாள் என்று எண்ணினார்.

“ஏம்மா இங்க பாரு. நல்லா கண்ணை முழிச்சு பாரு.. உன் பெயர் என்ன? சத்தமா சொல்லுமா உன் பெயர் என்ன?” என்று மருத்துவர் அதட்டி கண்ணத்தை தட்டி தட்டி கேட்டு கொண்டிருந்தார்..

“என்…… என்னோட பேரு மகிழினி”

“என்ன படிக்கிற? எந்த ஸ்கூல்ல படிக்கிற?

“நான் 12 ஆவது படிக்கிறேன். இங்க பக்கத்துல இருக்க ஹை ஸ்கூல்ல தான் படிக்கிறேன்”

“உங்க அப்பா பேர் என்ன.. உங்க வீட்டு போன் நம்பர் சொல்லு.. கண்ணு மூடாத மா.. கண்ண மூடாம என்ன பாத்துக்கிட்டே இரு.. என்கிட்ட பேசிக்கிட்டே இரு. “

இதற்கிடையில் அவள் கொடுத்த தகவல்கள் அனைத்தையும் பின்புறம் ஒருவர் சேகரித்துக் கொண்டிருந்தார். மகிழினி வீட்டிற்கு போன் கால் பறந்தது.. மகிழினி க்கு அடிபட்ட செய்தி தெரிந்த உடன் அவளது பள்ளியில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர். அவளது வகுப்பில் படிக்கும் மாணவர்களும் அனைவரும் அங்கு திரண்டு விட்டனர்.. இருந்தாலும் விஜி அவளை விட்டு நகரவே இல்லை அவளின் கைகளை பற்றிக்கொண்டு அவள் அருகிலேயே அவளைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்..

“உனக்கு ஒன்னும் இல்ல மகிழினி.. நான் கூடவே தான் இருக்கேன். உன்னை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன். உன்னை எங்கேயும் நான் போக விடமாட்டேன்.. கண்ண மூடி கண்ண திறந்து வெச்சிட்டே இரு எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என்று விஜி கண்ணீர் மல்க கதறிக் கொண்டிருந்தாள்..

மகிழினி இன் வீட்டில் தகவல் தெரிந்தவுடன் அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு விரைவாக வந்து சேர்ந்தனர்.. மகிழினி இரத்த வெள்ளத்தில் கண்டவுடன் அவளது தாய் பித்து பிடித்தவள் போல் அசையாமல் நின்று விட்டார்.. என்னதான் கொடுமைக்கார அப்பாவாக இருந்தாலும் அவளின் நிலைமையை கண்டு அவளது தந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதார்..

இவையெல்லாம் ஒருபுறம் நடக்க இன்னொருபுறம் மகிழினி என் மனதிற்குள் ஏற்பட்ட எண்ணங்கள் வார்த்தைகளால் கூற முடியாத ஒன்று..

இதுவரை தன் வாழ்க்கையில் தான் பெற்ற அனைத்து இன்பங்களும் துன்பங்களும் வெறுப்புகளும் வேதனைகளும் கஷ்டங்களும் நஷ்டங்களும் அனைத்துமே அவளின் மனதிற்குள் மின்னலின் ஒளியை போல வந்து வந்து சென்றது..

“எனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஆச்சு என்னால கால்களை அசைக்க கூட முடியலையே என்னால நல்லா கண்ண முடிச்சு கூட பார்க்க முடியலையே எனக்கு என்ன ஆகும் இந்த உலகத்துல இருப்பேனா இல்ல என் உயிர் இந்த உடம்பை விட்டு பிரிஞ்சு போயிருமா என்னோட கனவு என்னோட ஆசை என்னோட லட்சியம் எல்லாம் என்ன ஆகும் இதுவரைக்கும் தெரிந்தோ தெரியாமலோ நான் எவ்வளவு தப்பு பண்ணி இருப்பேன் அதையெல்லாம் நான் திருத்திக்கணும்.. கடவுளே நான் என்னோட வாழ்க்கையை வாழனும். இதுவரைக்கும் எவ்வளவோ கஷ்டத்தை கொடுத்துட்ட. இனியும் எவ்வளவு கொடுப்ப.. என் கூடவே இரு.. எனக்கு துணையாய் இரு கடவுளே..” என்று அவளின் மனதுக்குள் எண்ணங்களிடையே போராட்டம் நடந்து கொண்டிருந்தது..

இருந்தாலும் அவர் பேசிய வார்த்தை அம்மா அம்மா என்னால வலி தாங்க முடியல மா.. அம்மா அம்மா என்று அவளின் இதழ்கள் விம்மிக் கொண்டே இருந்தன..

ஒருவழியாக முதலுதவி மட்டும் செய்து அவளின் காயங்களுக்கு கட்டுப் போட்டு முடித்தார்கள் மருத்துவர்கள்.. அங்குள்ள மருத்துவர் மகிழினியின் தந்தையிடம்

“இப்போதைக்கு ரத்தம் நிக்கறதுக்கு மட்டும் தான் நாங்கள் கட்டுப் போட்டிருக்கோம்.. உடனே ஏதாவது பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க.. அங்க போனா தான் மேல் சிகிச்சை எல்லாம் பண்ண முடியும் சீக்கிரமா கூட்டிட்டு போங்க.. என்றார்..

கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை இழந்து கொண்டிருந்த மகிழினியை தூக்கிக்கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு விரைந்தார்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s