
அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு வெள்ளைத் துணி மூடியபடி ஒரு பெண்ணின் சடலம் வெளியே கொண்டு வரப்பட்டது..
கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசித்துக் கொண்டு இருந்த மகிழினி யின் பெற்றோர் அந்த சடலம் கொண்டுவரப்பட்டது பார்த்தவுடன் சுத்தமாக ஒரு நிமிடம் மூச்சு நிறுத்திவிட்டனர்..
உயிர் பிரிந்த உடல் போல் உறைந்து போய் நின்றார்கள்.. அவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது அந்த சடலம்.. இந்த சடலத்தை வண்டியில் தள்ளிக் கொண்டு வந்த அந்த நபர்,
“என்னம்மா ஒன்னும் பண்ண முடியலையாமா இந்த பொண்ணு செத்துப் போச்சு.. சடலத்த மார்ச்சரிக்கு தான் கொண்டு போறோம்.. கடைசியா முகத்தை பார்த்துக்கோங்க.. ” என்று கூறினார்..
உயிர் இழந்து நின்ற இருவரும் உணர்வின்றி நின்று கொண்டிருந்தார்கள்..
அப்போது பிணத்திற்கு போர்த்தி இருந்த வெள்ளை துணியை மெதுவாக விலக்கி முகத்தை காட்டினார்.. மகிழினி இன் பெற்றோர் இந்த முகத்தை காண தைரியமில்லாமல் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கத்தி அழத் தொடங்கினார்கள்..
அப்போது பின்னாடி இருந்து ஒரு குரல்…
“அவ செத்துப் போயிட்டாளா???.” என்று அலட்சியமான குரலில் ஒருவன் கேட்டான்.. அவனைத் திரும்பிப் பார்த்த மகிழினி யின் பெற்றோர் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றார்கள்.. உடனே அந்த சடலத்தின் முகத்தை வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார்கள் இருவரும்.. அப்பொழுது தான் தெரிந்தது அது மகிழினி அல்ல.. வேறு ஒரு பிரசவித்த பெண் என்று..
மகிழினி யின் பெற்றோர் பெருமூச்சு விட்டாலும், அவர்கள் முன் இருந்த அந்த பிரசவித்த பெண்ணின் சடலத்தை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
ஆனால் குடிபோதையில் இருந்த அந்தப் பெண்ணின் கணவன் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் “அவ செத்துப்போயிட்டாளா.. அப்பாடா சனியன் தொலைந்தது.. இங்கேயே அனாதை பிணம் என்று அடக்கம் பண்ணிருங்க. என்னால எல்லாம் இவளையும் இவ பெத்து போட்டு செத்து போன அந்த பிண்டத்தையும் என்னால கொண்டுபோய் எங்கேயும் வீச முடியாது.. இங்கே அனாதை பிணம் என்று சொல்லி எரிச்சிடுங்க..” என்று மனதின் ஓரத்தில் கூட ஒரு துளி ஈரம் இல்லாமல் கூறினான் அந்த குடிகார கணவன்..
இதைக் கேட்ட மகிழினி யின் அப்பா பளார் என்று கன்னத்தில் ஒரு அறை அறைந்தார்.. தலை சுற்றி கீழே விழுந்தான் அந்த குடிகாரன்..
“அடிங்க சார்.. அடிச்சி அந்த நாயை கொன்று இருங்க.. இந்த பொன்னு செத்து போனதற்குக் காரணமே இந்த குடிகார நாய் தான்.. இவன் மட்டும் இந்த பொண்ணுக்கு பிரசவ வலி வந்த உடனே இங்க வந்து ஒரு கையெழுத்து போட்டு இருந்திருந்தா உடனே ஆபரேஷன் பண்ணி இந்த குழந்தையையும் தாயையும் டாக்டருங்க காப்பாத்தி இருப்பாங்க.. இவனை எல்லாம் அடிச்சு கொன்னாலும் பாவம் பிடிக்காது.. ” என்ற ஆவேசமான குரலில் அந்தப் பெண்ணின் சடலத்தை தள்ளிக்கொண்டு வந்த நபர் கூறினார்..
இதைக் கேட்டு கொண்டிருந்த பக்கத்து சில நபர்களும் ஆளுக்கு ஒரு அறை அறைந்தார்கள் அந்த குடிகாரனை.. அந்த சமயத்தில் தூரத்திலிருந்து ஓடி வந்த ஒருவர் அவனை எட்டி ஒரு உதை உதைத்தான்.. இந்த குடிகாரன் பறந்து போய் விழுந்தான்..
“காதலிக்கிறேன் என்று சொல்லி என்னோட பொன்னை ஏமாத்தி இப்படி அநியாயமா கொலை பண்ணிட்டியே.. உன்னை அடிச்சு சாகடிச்சாலும் என்னோட கோபம் தீராது..” என்று சொல்லிக்கொண்டே நிறுத்தாமல் அடித்துக் கொண்டே இருந்தார் அந்த பிரசவித்து இறந்துபோன பெண்ணின் அப்பா..
சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் அந்த குடிகாரனை கைதுசெய்து அழைத்துச் சென்றார்கள்.
“விடுங்க சார் அந்த நாய என் கையால நானே அடிச்சு கொல்லனும்.. அப்ப தான் என்னோட ஆத்திரம் அடங்கும்.. என் பொண்ணு அநியாயமா இப்படி போய்ட்டாளே..” என்று கதறி கதறி அழுதார் அந்தப் பெண்ணின் அப்பா..
இதற்கிடையில் “மகிழினி யோட கூட வந்தவங்க உள்ள வாங்க.” என்று உள்ளே இருந்து வெளிவந்த ஒருவர் சத்தமாக கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டார்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மகிழினியின் தாயும் தந்தையும் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே சென்றார்கள்..
தொடரும்..